Tuesday, April 10, 2018

கைபேசிக் கலைச்சொல் அகராதி: ஆங்கிலம் - தமிழ்

Dictionary of Mobile Technical Terms: English - Tamil
கைபேசிக் கலைச்சொல் அகராதி: ஆங்கிலம் - தமிழ்
மொழி காலந்தோறும் பல்வேறு தடங்களின் பயணித்து வருகிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், தாட்சுவடிகள், நூல்கள் என்ற பரந்துபட்ட வரிசையில் வெவ்வேறு தளங்களில் பயணித்து. தற்போது கணினி, கைபேசி, மற்றும் பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளாலும் பயணிக்கிறது. இந்த நூற்றாண்டில் கைபேசி ஒரு மொழியை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. மேலும் வளரும் தொழில்நுட்பம் அனைத்து ஆங்கில மொழியில் மட்டுமே உள்ளது. இந்த சூழலில் கைபேசியின் கலைச்சொற்கள் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தமிழ் மக்களின் எண்ண ஓட்டதை சரியாக புரிந்துணர்ந்து இந்நூலை முனைவர் கோ. பழனிராஜன், முனைவர் லெ. ராஜேஷ், மு. முகமது யூனுஸ்(நான்), அகிலன் இராசரெத்தினம் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கிய அகாராதியை தமிழ் பெருமக்களுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
கைபேசியில் பயன்படுத்தப்படும் 2200 ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள், கைபேசி நிறுவனங்களைப் பற்றிய குறிப்பு, குறுஞ்செயலி பட்டியல் மற்றும் பயன்பாடு ஆகிய மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அகராதியை உருவாக்க துணைபுரிந்த பேராசிரியர்கள் ந.தெய்வசுந்தரம், வ.ஜெயதேவன். எல்.ராமமூர்த்தி, ச.இராதாகிருஷ்ணன், சு.இராஜராம் மற்றும் விண்ணொளி கல்வி அறக்கட்டளை நிறுவனர் சீனியார் (எ) சி.மு.முகம்மது அப்துல்லாஹ் ஆகியோர்கள் என்றும் மரியாதைக்கும் நன்றிக்கும் உரியவர்கள். நூல் விலை: 140 நூல் வேண்டுவேர் தொடர்புக்கு : மு. முகமது யூனுஸ் - 9443807987
மு. முகமது யூனுஸ்

லெ. ராஜேஷ் - 9786718777
லெ. ராஜேஷ்

அகிலன் இராசரெத்தினம்- 9965734497
அகிலன் இராசரெத்தினம்

கோ. பழனிராஜன் - 09567060631

கோ. பழனிராஜன்

Wednesday, April 4, 2018

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்


சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் தைத்திங்கள் 2-ஆம் நாளான திருவள்ளுவர் திருநாளில் நிகழ்த்தப்பெற்று வருகிறது. இவ்விழாவில், தமிழின் பெருமையை நிலைநிறுத்துவதோடு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் தம் வாழ்நாளெல்லாம் தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பின்வரும் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது விருதுகள் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
காண்க
https://drive.google.com/file/d/1b0UnjFBOemoMqaVpJjSsmxSs0utYdN9f/view http://tamilvalarchithurai.com/

Tuesday, April 3, 2018

தமிழ் ஒற்றுப்பிழை திருத்தி மற்றும் சொற்திருத்தி

Dr. Vasu Renganathan Professor, Penn Language Centre, University of Pennsylvania, USA அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட தமிழ் ஒற்றுப்பிழை திருத்தி மற்றும் சொற்திருத்தி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.thetamillanguage.com/spellcheck/ என்ற பக்கத்தில் தமிழ் மொழி பகுப்பாய்வு குறித்தான புதுப்பிக்கப்பட்ட நிரலிகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இத்தளத்தில் தமிழ் இணையப்பக்கங்களிலிருந்து சொற்களை அறுவடை செய்யும் வசதியுடன் கொண்ட ஒற்றுப்பிழைத் திருத்தி மற்றும் சொற்திருத்தி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 16500 சொற்கள் கொண்ட தரவுக்கோப்பையும் சொற்களைப் பகுப்பாயும் நிரலியையும் (Morphological tagger) கொண்டு இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தரவுகளுக்கு http://www.sas.upenn.edu/~vasur/

Monday, April 2, 2018

பொங்கல் விழா

பொங்கல் விழா
அகிலன் இராசரெத்தினம்
முடச்சிக்காடு
தைப்பொங்கல்

தைப்பொங்கல்
தை திங்கள் ஒன்றாம் நாள் அன்று தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு, லண்டன் என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விவசாய மக்கள் பூமி,சூரியன், விவசாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லுவதற்கும். அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டாலும் ஓவ்வெரு பகுதியிலும் ஒவ்வெருவிதமாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காவிரி ஆறு பாயும் கடைமடைப் பகுதியும் விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் போராவூரணி பகுதியில் பொங்கல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நான்கு நாட்களாக கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை


இதில் போகிப் பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து வீட்டில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை வெளியேற்றுகின்றனர். இன்று பேராவூரணியில் நடைபொறும் போகிச்சந்தை மிகவும் பிரச்சித்தப் பெற்றது. இந்த சந்தையில் புதிய மண் பானைகள், ஆப்பை ( தென்னை மரத்தின் கொட்டங்கச்சியில் தயாரானது) மற்றும் அனைத்து விதமான காய்கறிகளும் குறிப்பாக மாட்டு பொங்கலுக்கு தேவையான கயிறு, தும்பு, மூக்கணாங்கயிறு, சங்கிலி,காவி,வர்ணம் ஆகியவை போகிச்சந்தையில் இடம் பொறும், அடுத்த மூன்று நாட்களுக்குத் தேவையான பொருட்களையும் மாட்டிற்கு தேவையான பொருட்களையும் இன்றே பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வந்து வாங்கிச் செல்வார்கள்.

பொங்கல் பண்டிகை



போராவூரணி பகுதியில் உள்ள எல்லா கிராமங்ளிலும் வயல் வெளியின் நடுப் பகுதியில் விநாயகர் கோவில் இருக்கின்றது, பொங்கல் பண்டிகை அன்று காலையில் புத்தாடை உடுத்தி அந்த ஆண்டு அறுவடை செய்த புதிய நெல்லை கொண்டு புதிய பானையுடன் வயலில் உள்ள விநாயகர் கோவிலுக்கு குடும்பத்துடன் கிராம மக்கள் அனைவரும் வருகின்றனர். அங்கு கோவிலின் முன்பு அடுப்பு வெட்டி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் போது ”பொங்கலோ பொங்கல்” என் குரலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சர்க்கரைப் பொங்கலை விநாயகருக்குப் படைத்து வழிபடுகின்றனர் (படம் 0) பின்னர் அந்த சர்க்கரைப் பொங்கலை அங்கேயே அனைவருக்கும் பங்கிட்டு உண்கின்றனர். மாலையில் தங்கள் வீட்டு வாசலில் அடுப்பு வெட்டி (இந்த அடுப்பு ஆண்டு தோறும் ஒரே இடத்தில் வெட்டுகின்றனர் இதற்கு முகடு திறத்தல் என்று பெயர்) வாசலில் திட்டாணி அமைத்து மாட்டு சாணத்தில் சதுர அளவில் மொழுகிவிடுகின்றனர். இதில் மாட்டு சாணத்தில் அருகம் புல்லை வைத்து சாமி பிடித்து கண்ணி பூவை மாலை செய்து சாமிக்கு அணிவித்து வாசலின் கரும்பால் ஆன தோரணம் கட்டிவைக்கின்றனர். பின்னர் பொங்கல் வைக்கத் தேவையான அனைத்து பொருட்களையும் சாமிக்கு வைத்துப் படைத்து முதலின் தேங்காய் உடைத்து சாமியை வழிபட்டவுடன் பொங்கல் வைக்கத் தொடங்குகின்றனர் . இந்த அடுப்பில் இரண்டு பானைகளை வைத்து பொங்கல் இடுகின்றனர் ஒன்று சர்க்கரைப் பொங்கல் மற்றொன்று வெண்பொங்கல் இவ்வறு இரண்டு பானைகளில் பொங்கல் வைக்கும் முறை போராவூரணி பகுதியில் உள்ள கிராமங்களில் மட்டுமே பழக்கத்தில் உள்ளது. இந்த சாமிக்கு வைக்கும் பொருட்களின் சங்கும் வைப்பார்கள். பின்பு பொங்கல் பொங்கும் போது ”பொங்கலோ பொங்கல்” என் குரலிட்டு சங்கை எடுத்து ஒலித்து மணி அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றர். பின்னர் பொங்கலிட்டு வைத்த பின்னர் இரண்டு பொங்கல் பானைகளையும் சாமிக்கு முன்னர் வைக்கின்றனர். பின்னர் அதே அடுப்பில் மண்சட்டியை வைத்து அனைத்து விதமான காய்கரிகளையும் பயன்படுத்தி சாம்பார் வைக்கின்றனர். இந்த சாம்பார் வெண் பொங்கலைச் சாப்பிடுவதற்குப் பயன்படுகிறது, மூன்று தலை வாழை இலையைப் வைத்து பொங்கலை சாமிக்கு படைத்து வழிபடுகின்றனர். பின்னர் அதிகாலை எழுந்து அந்த சாமியை எடுத்து வீட்டில் நிலைப்படியில் வைக்கின்றனர். இந்த சாமி அடுத்த வருடம் வரை அதே இடத்தில் இருக்கும், அடுத்த ஆண்டு போகிப் பண்டிகை அன்றுதான் அதை எடுத்து ஆற்றில் வீசுகின்றனர். மறுநாள் அடுப்பை மண்னைக்கொண்டு மூடிவிடுவார்கள். இவ்வாறு பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


மாட்டுப் பொங்கல்


மாட்டுப் பொங்கல் அன்று அதிகாலை எழுந்து மாட்டுபொங்கல் வைக்கும் இடத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் சுத்தம் செய்து அச்சுக்கம்பு நடுகின்றனர். இந்த அச்சுக்கம்பும் அன்று காலையில் வெட்டிய மரத்தில் இருந்தே தயார் செய்கின்றனர். இந்த அச்சுக் கம்பில் தான் இன்று மாலையில் மாடுகளை கட்டுகின்றனர். பின்னர் கால்நடைகளைக் குளிப்பாட்டி (மாடு மற்றும் ஆடு) புதிய கயிறு அணிவித்து பொட்டு வைத்து மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசிகின்றனர் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் அந்த கட்சியின் வர்ணத்தை மாட்டின் கொம்பில் பூசுகின்றனர். மாலையில் கிராம மக்கள் அனைவரும் அவர்கள் ஒவ்வெரு குழுக்களாக தங்கள் பகுதியில் பாரம்பரியமாக ஒரே இடத்தில்தான் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள் அந்த இடத்தில் கூடுகின்றார்கள். அங்கு மாட்டுப்பொங்கலுக்கான சாமியைத் தயார் செய்கின்றார்கள், இதற்க்கு ஒரு திட்டு அமைத்து அதில் தென்னை மரத்தின் பாலையத் பாதி அளவில் வெட்டி கண்ணிப்பூ தயார்செய்து சாமியைத் தயார் செய்கின்றனர். (படம் 1) பின்னர் தேங்காய் உடைத்து சாமியை கும்பிட்ட பின் புதிதாக தயார்செய்த அச்சுக் கம்பை அடிக்கின்றர். ஆண்கள் சாமி அமைத்திருக்கும் இடத்திற்கு முன் மிக நீளமான அடுப்பை வெட்டுகின்றனர் இந்த ஒரே அடுப்பில் தான் அனைவரும் பொங்கல் வைக்கின்றனர். (படம் 2) அச்சுக்கம்பை அடித்த பின் தங்களுடைய ஆடு,மாடுகளைத் கொண்டுவந்து கட்டுகின்றனர் அதன்பின் மாட்டுக்கான மாலையை ஆண்கள் தயார் செய்கின்றனர் இந்த மாலை கரும்பு, கண்ணி பூ, பிரண்டை செடி, அருகம்புல் இவற்றைக்கொண்டு கோரை செடியால் இணைத்து கட்டுகின்றார்கள். பெண்கள் தயார் செய்யப்பட்ட அடுப்பில் பொங்கல் வைக்கின்றார்கள், இதில் சாமிக்குப் படைப்பதற்காக பொதுப்பானை வைத்து அதில் வெண்பொங்கல் செய்கின்றார்கள். இந்தப் பொங்கலைத்தான் ஆயங்களச் சேறுக்கு பயன் படுத்துகிறார்கள் ஆயங்களச் சோறு என்பது பேராவூரணி பகுதி கிராமங்ளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் பொங்கல் சோறு இதில் வெண்பொங்கல் தயார் செய்து அதை வாழை இலையில் கொட்டி அதன் மீது பாலாப்பலச்சுழைகளை அடுக்கி அதன் மேல் வெல்லதை அடுக்கி பின்னர் அதன் மேல் வாழைப்பழச்சுழைகளை அடுக்கி அதன் மேல் தேங்காய் துருவி போட்டு ஒருவர் பிசைந்து கொடுப்பர், அவர்கள் பிசையும் பொழுது வாயை ஒரு துணியால் கட்டிக்கொண்டு பிசையும் வழக்கம் உள்ளது (படம் 3) பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த பொங்கல் சோறு, எண்ணய், மாலை,குங்குமம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஒவ்வெரு கால்நடைக்கும் சென்று முதலில் பொட்டு வைத்து தலையில் எண்ணய் வைத்து மாலை சூட்டி பொங்கல் சேறை மாட்டிற்கு ஊட்டி மகிழ்கின்றனர் அப்போது மணியத்து ஓசை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுதுகின்றனர். ஆண்டு முழுவதும் நமக்காக உழைத்த கால் நடைகளுக்கு நன்றி செய்யும் நிகழ்வாக இது நடைபெறுகிறது. மாட்டிற்க்கு பொங்கல் அளித்தபின் எல்லா கால்நடைகளுக்கும் திருஷ்டி கழிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் தென்னை மட்டையால் ஆன நீண்ட தீப்பந்தத்தைக் தயார் செய்கின்றனர், பெரியவர்கள் கையில் மணி, தீச்சட்டி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கால்நடைகள் கட்டி இருக்கும் பகுதியை சுத்தி மூன்று முறை வலம் வந்து தீச்சட்டியுடன் கிழக்குப் பக்கமாக கொட்டுகின்றனர்(படம் 4). பின்னர் ஆண்கள் பெண்கள் அனைவைரும் வரிசையாக அடுப்பின் பின்புறமாக நின்று சாமி கும்பிடுகின்றனர் (படம் 5) (படம் 6). மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் ஏலம் விடும் நிகழ்ச்சி மிக சிறப்பான நிகழ்வாகும். மாட்டுக்கிடையில் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கி வந்து ஏலம் விடுவர் (படம் 7) அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஏலம் எடுத்துக்கொண்டு அடுத்த வருடம் பணம் செலுத்தலாம் இந்த பணத்தைக்கொண்டு மாட்டுப் பொங்கலுக்கான நிர்வாகச் செலவுகளை கவனிக்கின்றனர். ஏலம் விடும் நிகழ்வு முடிந்தவுடன் அனைவரும் ஆயங்கலச் சேறை சாப்பிட்டு கால்நடைகளை அங்கேயே விட்டுவிட்டு செல்கின்றனர்.
காணும் பொங்கல் காணும் பொங்கல் அன்று காலையில் மாட்டுகிடைக்கு அனைவரும் வந்து விடுகின்றனர் மாடுகளுக்கு இரண்டு மாலை தயார் செய்கின்றனர் ஒன்றில் கண்ணிப் பூ, பிரண்டை, வேப்பிலை மூன்றையும் இணைத்து கட்டுகின்றனர் மற்றொன்றில் கரும்பு,தேங்காய் சிலர் பணம், வேஷ்டி போன்றவற்றையும் இணைத்து மாலையாகக் கட்டுகின்றனர். இதனை மாட்டிற்கு அணிவித்து வணங்குகின்றனர். பின்னர் மாடுகளை அழைத்து வந்து முதல்நாள் தீயிட்ட பகுதியில் மீண்டும் தீயிட்டு மாடுகளைத் தாண்ட செய்கின்றனர். தீக்கு பின்புறமாக நின்று சிறுவர்களும், பெரியவர்களும் கரும்பையும் பணம் போன்றவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் கால்நடைகளை அனைவரும் தங்கள் வீட்டுக்கு ஓட்டிச்செல்கின்றனர்.

விளையாட்டு விழா


பேராவூரணி பகுதியில் உள்ள கிராமங்களின் காணும் பொங்கல் அன்று நடைபெரும் விளையாட்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாடு அவிழ்த்து விடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் புத்தாடை அணிந்து விளையாட்டுத் திடலுக்கு வந்துவிடுகின்றனர் காலை முதல் இரவு வரை சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுகளும், மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு, கைப்புறா போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறுகிறது. இவ்வாறு நான்கு நாட்கள் போராவூரணி பகுதியில் உள்ள கிராமங்களில் நடைபொரும் பொங்கல் நிகழ்ச்சி மிகச்சிறப்பு வாய்ந்தாகவும் நினைக்க நினைக்க நெஞ்சைவிட்டு நீங்கா நினைவாகவும் இன்றைக்கும் நடந்து கொண்டு இருக்கின்றது